சூர்ய முத்திரை
நிலத் தத்துவத்தைக் குறிக்கும் மோதிர விரலை மடக்கி அதன் நுனியை கட்டைவிரலின் அடிப்பாகத்தில் மெதுவாக வைத்து அக்னித் தத்துவத்தைக் குறிக்கும் கட்டை விரலால் மோதிரவிரலை மென்மையாக அழுத்தவும். மற்ற மூன்று விரல்களையும் நேராக வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும் படி அமர்ந்த நிலையில் இம்முத்திரையைச் செய்யவும்.
சிறப்புகள்
நிலத்தத்துவத்தின் குறியீடான மோதிரவிரல் அக்னித் தத்துவத்தின் குறியீடான கட்டை விரலால் அழுத்தப்படும்போது தசைகளின் ஒழுங்கற்ற வளர்ச்சிக்குக் காரணமான நிலத்தத்துவத்தை சூர்யமுத்திரைக் கட்டுப்படுத்தி அதன் விளைவாக உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கிறது. மேலும், கட்டைவிரலின் நுனியும் அழுத்தப்படுவதால் பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் நாடிகளும் அவற்றோடு தொடர்புடைய தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளும் தூண்டப்படுகின்றன.
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து உள்ளங்கையை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து சூர்யமுத்திரையைச் செய்யவும். இந்த முத்திரை தைராய்டு சுரப்பியைத் தூண்டி தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவும். காலை நேர நடைப்பயிற்சி, பிறரிடம் உரையாடுதல், தொலைக்காட்சி பார்த்தல், போன்ற நேரத்தில் சூர்ய முத்திரையைச் செய்யலாம். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பத்மாசனம், வஜ்ராசனம், சுகாசனம், ஸ்வஸ்திகாசனம், போன்ற ஆசனங்களில் அமர்ந்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைச் செய்தால் உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.
பலன்கள்
சூர்யமுத்திரை ஆஸ்த்மா, சுவாசக்கோளாறுகள், சைனஸ், காசம், சளி, மற்றும் நிமோனியா ஆகிய நோய்களைக் குணப்படுத்தும். இம்முத்திரை ஜீரண ஆற்றலை அதிகரித்து நம்மை உற்சாகத்தால் நிறைக்கும்.
எச்சரிக்கை
கட்டை விரலின் அக்னித் தத்துவமும் மோதிரவிரலின் நிலத் தத்துவமும் ஒன்றிணையும்போது உடல் வெப்ப நிலை அதிகரிக்கும். அதனால் உடல் பலம் குன்றியவர்கள் ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு வெப்ப நிலையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என அறிந்த பின், தம்மால் இயலும், அல்லது பயனுள்ளதாக இருக்கிறது என்றால் மட்டுமே இம்முத்திரையைத் தொடரவேண்டும். சூர்யமுத்திரையோடு லிங்கமுத்திரையையும் சேர்த்து செய்தால் அதிகப் பலன்களைப் பெறலாம். இந்த இரு முத்திரைகளும் உடல் வெப்பத்தை அதிகரிப்பதால் அதிக அளவு திரவ உணவை நாம் உட்கொள்ளவேண்டும். விரும்பிய பலனை அடைந்தவுடன் இந்த முத்திரையை நாம் தற்காலிகமாக நிறுத்திவிட வேண்டும். இந்த முத்திரை மன அழுத்தத்தைக் குறைக்கும். ஜோதிடத்தில் மோதிரவிரலின் அடிப்பகுதி சூரிய சக்தியைக் குறிப்பதால் அதிகப்படியான உடற்கொழுப்பு எரிக்கப்படுகிறது.
வாழ்க வையகம், வாழ்க பாரதம், வாழ்க தமிழகம்
No comments:
Post a Comment