Sunday, May 9, 2021

ப்ராணாயாமம் என்றால் என்ன? what is the mean pranayama?

 


''ப்ராணாயாமம்''

    ''ப்ராணன்'' என்றால் சுவாசிப்பதன் மூலம் நாம் பெறும் சக்தியைக் குறிக்கும். ப்ராணாயாமம் என்பது சுவாஸப் பயிற்சி முறைகளைக் குறிப்பதாம். ப்ராணாயாமம் குறித்து 14 பாடல்களில் 'பிறிது மொழிதல் அணி' என்னும் அலங்கார முறையில் திருமூலர் அருளிச் செய்துள்ளார். ப்ராணவாயு 3 நாடிகளில் உலாவுகிறது. இட நாடி, பிங்கலை நாடி, ஸுஷும்னா நாடி, எனப்படும். இட நாடி என்பது இடது மூக்கு வழியாக மூச்சு ஓடுவதாகும். பிங்கலை நாடி என்பது வலது மூக்கு வழியாக மூச்சு ஓடுவதாகும்.ஸுஷும்னா ( சுழுமுனை) என்பது முதுகுத்தண்டைச் சுற்றி செல்லக்கூடியது.

ப்ராணவாயு இயல்பாகவே இடகலையிலும், பிங்கலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த இயக்கத்தை முறைப்படி மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதே ப்ராணாயாமம் ஆகும்.இடகலை நாடி வலக்கால் பெருவிரலில் இருந்து தொடங்கி மேல் ஏறிப் படரும். பிங்கலை நாடி இடக்கால் பெருவிரலில் இருந்து தொடங்கி மேல் ஏறிப் படரும். இவை இரண்டும் நாபியில் இணைந்து, இடகலை இடப்பக்கமாகவும், பிங்கலை வலப்பக்கமாகவும் மாறி முதுகு, பிடரி, தலை, வழியாகச் சென்று மூக்கின் இடத்துளை, வலத்துளை வழியாக வந்து முடியும்.

எனவே இரு நாடிகளும் பிணையும் இடமாகிய நாபிப் பகுதியில் நாடியின் வழியே சென்று மூக்கின் வழி வந்து நிற்கும் காற்று மீண்டும் அவற்றின் வழியே வெளியே செல்லும்.ப்ராணவாயு மட்டுமே இவ்வாறு சென்று வருவதால் இது ப்ராணாயாமம் ஆகும். அஷ்டாங்கயோகத்தில் ப்ராணாயாமம் நான்காவது நிலையாகக் கருதப்படுகிறது. இயம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரணை, த்யானம், ஸமாதி என்னும் எட்டு நிலைகளை உள்ளடக்கியது தான் அஷ்டாங்கயோகம் ஆகும். அதில் ப்ராணாயாமம் என்றும்,  வளிநிலை என்றும், சுவாஸப் பயிற்சி முறைகள் எடுத்தியம்பப் படுகின்றன.

''ப்ராணா' என்ற சொல்லிற்கு மூச்சு, சுவாஸம், உயிர், ஜீவன், காற்று, சக்தி, அல்லது வலிமை என்று பொருள்படும்.ப்ராணா என்ற சொல் உடம்பிற்கு மாறாக ஆன்மாவோடு தொடர்பு படுகிறது. பொதுவாக சுவாஸக் காற்றைக் குறிப்பதற்கு ''ப்ராணா'' என்று கூறப்படுகிறது. ''ஆயாமம்'' என்றால் நீளம். விரிதல், இருத்தல் அல்லது கட்டுப்படுத்துதல் என்று பொருள். எனவே, ப்ராணாயாமம் என்றால் சுவாஸத்தை நீட்டித்தலும், கட்டுப்படுத்துதலும் ஆகும். இந்தக் கட்டுப்பாடு என்பது சுவாஸிப்பதின் அனைத்து நிலைகளுக்கும் உகந்ததாகும்.

சுவாஸத்தை உள்ளிழுப்பது ''பூரகம்'' எனப்படும். அதாவது காற்றை உள்ளே இழுத்து நிறைப்படுத்துவது.சுவாஸத்தை வெளியேற்றுவதை ''ரேசகம்''என்பர். ரேசகம் என்றால் நுரையீரலில் இருந்து காற்றை வெளியேற்றுவது ஆகும். சுவாஸத்தை உள்நிறுத்துவதை ''கும்பகம்'' என்பர். கும்பகம் செய்யும்பொழுது காற்றை உள்ளே இழுத்தலும்கூடாது. வெளியே விடுவதும் கூடாது. ஆக இந்த மூன்று நிலைகளிலும் கட்டுப்பாடுடன் இருக்கப் பழகுவதே ''ப்ராணாயாமம்'' ஆகும். 

காற்றை சுவாஸிப்பதையும், உள் நிறுத்துவதையும், வெளியேற்றுவதையும் ஒரே சொல்லாகக் குறிக்குமாறு ''கும்பகம்'' என்று ஹட யோக நூலகளில் குறிப்பிட்டிருக்கும். ஆக, கும்பகம் என்றால், ப்ராணாயாமம் செய்தல் என்று பொருள். எனினும்  பயிற்சியின் போது கும்பகம் என்றால் சுவாஸத்தை உள் நிறுத்துவது ஆகும். ''கும்பம்'' என்றால் கூஜா, குடம், பானை, என்று பொருள்.  ஒரு தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டோமானால் அதில் தண்ணீர் இல்லாதபொழுது காற்று நிறைந்திருக்கும். காற்றை வெளியேற்ற தண்ணீரை ஏற்றி நிரப்பவேண்டும். தண்ணீரை வெளியேற்றினால் காற்று நிறைந்திருக்கும். அதைப் போல் கும்பகத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

சுவாஸத்தைப் பூரணமாக நுரையீரல்களில் நிரப்பிய பிறகும் சுவாஸத்தை பூரணமாக வெளியேற்றிய பிறகும் என்று இருவகைப்படும். 

சுவாஸத்தைப் பூரணமாக உள்ளே இழுத்து, வெளியேற்றுவதற்கு முன்னரே காற்றை உள்நிறுத்துவதற்கு ''அந்தர் கும்பகம்'' என்று பெயர். சுவாஸத்தைப் பூரணமாக வெளியேற்றிய பிறகு காற்றைத் திரும்பவும் உள்ளிழுக்காமல் சிறிது நேரம் வைத்திருப்பதற்கு ''பாஹ்ய கும்பகம்'' என்று பெயர்.

''அந்தர'' என்றால் உள்ளே அல்லது ''அகத்தே'' என்று பொருள். ''பாஹ்ய'' என்றால் வெளியே அல்லது ''புறத்தே'' என்று அர்த்தம்.


தொடரும்... 

No comments:

Post a Comment

SAMANA MUDRA சமான முத்திரை

சமான முத்திரை பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஒரு முத்திரை இந்த சமான முத்திரை. நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களையும், நீ...